×

மாவட்டத்தில் நடப்பாண்டு ரூ.1.62 கோடி கொடி நாள் வசூல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாண்டு கொடி நாள் வசூல் ரூ.1.62 கோடி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடிநாள் தினத்தையொட்டி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் குத்துவிளக்கேற்றி, கொடிநாள் நிதி வழங்கி, 20 முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:

நமது இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் வீடு, மனைவி மக்களை மறந்து, 24 மணி நேரமும் நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லைப் பகுதிகளில் அரண்போல் நின்று, பாதுகாத்து செயல்பட்டு வரும் முப்படை வீரர்களின் தியாகத்தினை நினைவு கூர்ந்து போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ம் நாளன்று படைவீரர் கொடிநாள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் நலனை காப்பதுடன், இந்திய முப்படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்களின் பல்வேறு கோரிக்கை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர், முன்னாள் படைவீரர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் வகையில், காக்கும் கரங்கள் என்ற உன்னதமான திட்டத்தை துவக்கி உள்ளார். அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் கடனுதவியாக, மூலதன மானியத்துடன் வட்டி தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு விதமான திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, கடனுதவிகள் வழங்கப்படுகிறது. மேலும், அவர்களது நிதி ஆதாரத்திற்காக ஆண்டுதோறும் கொடிநாள் நிதி திரட்டப்பட்டு, முன்னாள் படைவீரர் நலத்துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் சிறார்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டிற்கான படைவீரர் கொடிநாள் வசூல் குறியீடாக ரூ.1 கோடியே 41 லட்சத்து 55 ஆயிரம் என அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சியால், இவ்வாண்டு கொடிநாள் வசூலாக இதுவரை ரூ.1 கோடியே 61 லட்சத்து 85 ஆயிரத்து 72 (114 சதவீதம்) வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 2025ம் ஆண்டில் கூடுதலாக 200 சதவிகிதம் வசூல் செய்வோம் என்ற நம்பிக்கையினை எடுத்துரைப்பதுடன், இம்மாவட்டத்தில் உள்ள அனைவரும் தாராளமாக கொடிநாள் நன்கொடை வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கலெக்டர், முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கு தொகுப்பு நிதியில் இருந்து 20 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், ஒரே மகன், மகள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள், மகள்களை ராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு போர் பணி ஊக்க மானியமாக 5 நபர்களுக்கு வெள்ளி பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஓய்வுபெற்ற பிரிகேடியர் சுதந்திரம், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல்கள் திருப்பதி, சீனிவாசன், முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் தனபால், தாசில்தார் ரமேஷ், முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : Flag Day ,Krishnagiri ,Krishnagiri district ,Ex-Servicemen Welfare Department ,District Collector ,Dinesh Kumar ,
× RELATED மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்...