நெல்லை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதன் பின்னர் புத்தாண்டு பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. மேலும் அரையாண்டு விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் குடும்பத்தோடு தென்மாவட்டங்களுக்கு திரும்புவர். இதையொட்டி தெற்கு ரயில்வேயில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இம்மாத இறுதியில் இயக்கப்பட உள்ளன.
அந்த அடிப்படையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட வருவோருக்கு மைசூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூரு – தூத்துக்குடி சிறப்பு ரயில் (06283) வருகிற 23 மற்றும் 27ம் தேதிகளில் மைசூருவில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக தூத்துக்குடி- மைசூரு சிறப்பு ரயில் வருகிற 24 மற்றும் 28ம் தேதிகளில் மதியம் 2 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூரு சென்று சேரும்.
இந்த ரயில்கள் மண்டியா, ராமநகரம், பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்குகின்றன. இந்த ரயில்களில் 1 ஏசி இரண்டடுக்கு பெட்டி, 2 ஏசி மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 9 ஸ்லிப்பர் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.
