- விமான போக்குவரத்து அமைச்சகம்
- தில்லி
- யூனியன் விமானப் போக்குவரத்து அமைச்சு
- இண்டிகோ
- மும்பை
- ஹைதெராபாத்
- பெங்களூரு
டெல்லி: நாடு முழுவதும் ஓரிரு நாட்களில் விமான சேவைகள் சீராகும் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று ஒரே நாளில் 550க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்தது. விமானிகள் சோர்வடைவதைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட புதிய பணி நேரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை (எஃப்.டி.டி.எல்) அமல்படுத்துவதில் ஏற்பட்டத் திட்டமிடல் குறைபாடுகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்டத் திடீர் விமானிகள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் விமானச் சேவைகள் முடங்கின. விமான நிலையங்களில் நீண்ட நேரமாகக் காத்திருந்த பயணிகள், உரிய முன்னறிவிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மோசமான வானிலை போன்றவையும் இந்தச் சிக்கலுக்குக் கூடுதல் காரணங்களாக அமைந்தன. இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், பயணிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஓரிரு நாட்களில் விமான சேவைகள் சீராகும் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பயணிகளுக்கான சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் விமான சேவைகள் இன்று நள்ளிரவு முதல் சீராகும். நள்ளிரவு முதல் அனைத்து விமான சேவை திட்டமிடல்களும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த இரண்டு நாள்களில் முழுவதுமாக விமான சேவைகள் சீராகும். விமானப் போக்குவரத்து சேவை பாதிப்புக்குக் காரணமான இண்டிகோ ஏர்லைன்ஸ், பாதிக்கப்பட்ட பயணிகளின் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்ப கிடைப்பதை உறுதி செய்யும். விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று கூறியுள்ளது.
