×

தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் கட்டப்பட்ட 96 அச்சக பணியாளர்கள் குடியிருப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, டிச.3: தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் கட்டப்பட்டுள்ள அரசு அச்சக பணியாளர்கள் குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சட்ட பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானிய கோரிக்கையில், அரசு அச்சக பணியாளர்களுக்கு சென்னை, தண்டையார்பேட்டை – காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் ரூ.39 கோடியே 30 லட்சம் செலவில் 79,000 சதுரடி பரப்பளவில், 96 குடியிருப்புகளுடன், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.

இதை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார். இக்குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 450 சதுரடியுடன், குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகுசாலை, தெரு விளக்கு, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச்செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் ஷோபனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thandaiyarpet ,Kamaraj Nagar ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Legislative Assembly ,
× RELATED மண்டலம் 4 மற்றும் 8க்கு கோரப்பட்ட...