பெரம்பூர், டிச.3: சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வடசென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், ஒரு சில இடங்களில் தேங்கிய தண்ணீர் மிக அதிகளவில் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வியாசர்பாடி கணேசபுரம் ஜீவா சுரங்கப்பாதை பகுதியில் பெய்த மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார்கள் மூலம் அகற்றினர். ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது.
இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகனங்கள் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் மற்றும் வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலம் வழியாக மாற்றிவிடப்பட்டது. ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி வந்தாலும் பெரம்பூர் நெடுஞ்சாலை, புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் வியாசர்பாடி கணேசபுரம் ஜீவா சுரங்கப்பாதை பகுதியில் கலந்து வருகிறது. சிறு மழைக்கே இந்த பகுதியில் தண்ணீர் தேங்கிவிடும். தற்போது கனமழை பெய்துள்ளதால் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பெரம்பூர் மங்களபுரம் வழியாக பெரம்பூர் ஜமாலியா செல்லும் சிறிய சுரங்கப்பாதை முழுமையாக நிரம்பியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
