×

அன்புமணியை வீழ்த்த வியூகம்; ‘ஐயா பாமக’ ராமதாஸ் புதுக்கட்சி: டெல்லியில் 2 எம்எல்ஏக்கள் முகாம்

சென்னை: மகனுடனான அதிகார மோதலால் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய கட்சி தொடங்கும் திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக 2 எம்எல்ஏக்கள் டெல்லி சென்றுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே அதிகார மோதலால் கட்சி இரண்டாக உடைந்தது. அதேசமயம் கட்சியை கைப்பற்றுவதற்காக இரு தரப்பினரும் சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அன்புமணி தரப்புக்கு 3 எம்எல்ஏ ஆதரவும், ராமதாஸ் பக்கம் ஜி.கே.மணி, அருள் என 2 எம்எல்ஏக்கள் ஆதரவும் உள்ளது. இதை பயன்படுத்தியும், பீகார் தேர்தலை முன்வைத்தும் அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தை அணுகி மாம்பழம் சின்னத்தையும், பாமக கட்சி அங்கீகாரத்தையும் பெற்றதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு அறிவித்தார். கொல்லைபுற வழியாக மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்பு பெற்றுள்ளதாக ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருளும் தெரிவித்துள்ளார்.

‘பாமகவின் நிறுவன தலைவர் என்ற முறையில் ராமதாசுக்குதான் கட்சி சொந்தம். எனவே, தங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மனு கொடுத்துள்ளார். தற்போதைய நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதால், உச்ச நீதிமன்றத்தை நாட ராமதாஸ் முடிவு செய்து உள்ளார். ஒருபுறம் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டாலும், தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சியை முடக்கிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் ராமதாஸ் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாற்றுத்திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாமகவின் நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் நேரடியாக புதிய கட்சி தொடங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் இருக்கலாம் என்பதால், தனது நம்பிக்கைக்குரிய, நீண்டகால நண்பர் ஒருவரின் பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக 100 பேரிடம் ராமதாஸ் தரப்பு பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அந்த புதிய கட்சியை ‘ஐயா பாமக’ என்ற பெயரில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் விரைவில் இந்த புதிய கட்சி பதிவு செய்யப்படலாம் எனவும்,கட்சியின் கொள்கைகள், வழிகாட்டுதல், மற்றும் கூட்டணி முடிவுகள் அனைத்தும் ராமதாசிடமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கான நடவடிக்கையில் இறங்க பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர் உள்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டேன் என்று கூறி விட்டால், உடனடியாக புதிய கட்சியை தொடங்க அவர்கள் திட்டமிட்டு, டெல்லியில் அதற்கான வேலைகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் பாமகவின் மூலாதாரமான வன்னியர் சங்கத்தின் பெரும்பான்மையான நிர்வாகிகள் ராமதாஸையே இன்னும் தலைவராக மதிப்பதால், அவர்களது ஆதரவு ராமதாசுக்கு சாதகமாக அமையலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ராமதாஸ் மீண்டும் புதிய கட்சி ஆரம்பித்தால் திமுக, அதிமுக இரு பெரும் கட்சிகளும் வன்னியர் வாக்குகளுக்காக ராமதாசுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கலாம்.

பாமகவில் ஏற்பட்ட பிளவு அதிமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமதாஸ் புதிய கட்சி தொடங்கினால் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேசமயம் வன்னியர் சமூகத்தின் அரசியல் குரல் இரண்டாக பிளவுபட்டால், அது சமூகத்திற்கான சீட்டுகளை பெறுவதற்கு பேரம் பேசும் சக்தியை குறைக்கலாம்.

அல்லது, ஒரே சமூகத்தை சேர்ந்த இரு கட்சிகள் பெரிய கட்சிகளிடம் அதிக சலுகைகளை பெற வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் எப்போதும் முக்கியமான இடத்தில் இருந்து வருகிறது. அன்புமணியை வீழ்த்த இந்த புதிய அஸ்திரத்தை ராமதாஸ் கையில் எடுத்துள்ளாரா என்பது அடுத்த சில வாரங்களில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Anbumani ,PMK ,Ramadoss' ,Delhi ,Chennai ,Ramadoss ,Tamil Nadu ,Anbumani… ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி...