×

ஸ்டார்க், ஸ்டோக்ஸ் மாயாஜாலம்: ரணகளமான ஆஷஸ் முதல் டெஸ்ட்; ஏறி அடித்த ஆஸியை எகிறி அடித்த இங்கி; ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் காலி

பெர்த்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டின் முதல் நாளில் 19 விக்கெட்டுகள் விழுந்தன. முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்னுடன் திணறி வரும் ஆஸ்திரேலியா 49 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று துவங்கியது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆஸி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் துல்லிய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பிரென்டன் டாகெட்டும் (2 விக்கெட்) அற்புதமாக பந்து வீசி இங்கிலாந்து வீரர்களை திணறடித்தார். அதனால், 32.5 ஓவர்களில் இங்கிலாந்து 172 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் சிறப்பாக ஆடி 52 ரன் எடுத்தார். ஒல்லி போப் 36, ஜேமி ஸ்மித் 33 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். பின்னர், முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி அணியின் துவக்க வீரர் ஜேக் வெதரால்ட் ரன் எடுக்காமல், ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் எல்பிடபிள்யு ஆகி அதிர்ச்சி தந்தார். மற்றொரு துவக்க வீரர் மார்னஸ் லபுஷனேவையும், ஆர்ச்சர் கிளீன் போல்டாக்கினார்.

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் அட்டகாசமாக பந்துகளை வீசி அதிரடியாக 5 விக்கெட்டுகளை பறித்தார். பிரைடன் கார்ஸ் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் மளமளவென விக்கெட்டுகளை இழந்த ஆஸி, 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன் மட்டுமே எடுத்து திணறி வருகிறது. அந்த அணியின் அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 26 ரன் எடுத்தார். 49 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று 2ம் நாளில் முதல் இன்னிங்சை ஆஸி தொடர உள்ளது.

Tags : Stokes' ,Ashes Test ,Inge ,Aussies ,Perth ,England ,Australia ,Australia… ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி