×

சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு, 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தற்போது சம்பா நெல் சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 26.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 6.27 லட்சம் விவசாயிகள் தங்களது 15 லட்சம் ஏக்கர் பயிர்களைக் காப்பீடு செய்துள்ளனர். இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதமாகும்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரும் 15ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. ஆனால், தொடர் மழையால் அறுவடை மற்றும் நடவுப் பணிகளில் ஏற்பட்ட தாமதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளால் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் போன்ற காரணங்களால் பல விவசாயிகளால் குறித்த தேதிக்குள் காப்பீடு செய்ய இயலவில்லை.

இதனையடுத்து, பயிர்க் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் துரித நடவடிக்கையின் பேரில் தமிழ்நாடு அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அரசு, காலக்கெடுவை நீட்டித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ‘விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற உயர் நோக்குடன், சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதி வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, இதுவரை சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Samba Life Insurance ,Minister ,MRK Paneer Selvam ,Chennai ,M. R. K. Paneer Selvam ,Tamil Nadu ,
× RELATED மதிமுக வேட்பாளர் உதய சூரியன்...