×

மைசூர் வனவியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒட்டகச்சிவிங்கி, காட்டுக்கழுதை

கூடுவாஞ்சேரி, நவ.13: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், ஒட்டகச்சிவிங்கி மற்றும் காட்டுகழுதை கொண்டுவரப்படுகிறது. அதற்கு மாற்றாக சிங்கவால் குரங்குகளை மைசூர் வனவியல் பூங்காவிற்கு அனுப்ப வண்டலூர் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள், ஊர்வன, பறவை இனங்கள் பாதுகாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் வனவிலங்குகள் பரிமாற்றம் நடப்பது வழக்கம். எந்த விலங்குகள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளதோ அந்த விலங்குகளை இந்தியாவில் உள்ள மற்ற வனவிலங்கு பூங்காவுக்கு கொடுத்து பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு ஜோடி ஒட்டகச் சிவிங்கியில் ஆண் ஒட்டகச்சிவிங்கி கடந்த ஆண்டு இறந்துவிட்டது. இதேபோல், பெண் காட்டுக் கழுதையும் கடந்த ஆண்டு இறந்துவிட்டது. இதனால் இனப்பெருக்கத்திற்கு ஆண் காட்டு கழுதை மற்றும் பெண் ஒட்டகச்சிவிங்கி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தேவைப்படுகிறது. அதற்கு பதில் சிங்கவால் குரங்குகளை மைசூர் வனவியல் பூங்காவிற்கு அனுப்ப பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஒட்டகச்சிவிங்கி மற்றும் காட்டு கழுதை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Mysore Forest Park ,Vandalur Zoo ,Kuduvancheri ,Arignar ,Anna Zoo ,Vandalur ,Vandalur park ,Mysore Forest Park.… ,
× RELATED காஞ்சிபுரத்தில் 770 படுக்கை வசதிகளுடன்...