×

இந்தியா-ஆஸி டி20 தொடர் முதல் போட்டி இன்று துவக்கம்

 

கான்பரா: பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி, கான்பராவில் இன்று நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி, ஒன்றில் மட்டுமே வெற்றியை பெற்றது. இந்நிலையில், ஆஸி-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று கான்பரா நகரில் துவங்குகிறது.

டி20 போட்டிகளை பொறுத்தவரை, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரு அணிகளும், தாம் மோதிய கடைசி 10 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று வலுவானதாக காணப்படுகின்றன. ஒன்றில் தோல்வி அடைந்துள்ளன. இந்திய டி20 அணி, பொதுவாக மற்ற வடிவ போட்டிகளை ஒப்பிடுகையில் மேம்பட்ட ஒன்றாக திகழ்கிறது. டி20 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சூர்யகுமார் யாதவின் செயல்பாடு அற்புதமாக உள்ளது. அவரது தலைமையில் இந்திய அணி ஆடிய 29 போட்டிகளில் 23ல் வெற்றி கிட்டியுள்ளது. இந்திய டி20யில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரரும் பயமென்றால் என்ன என்ற கேள்வியுடன் எதிர்வரும் பந்துகளை விளாசித் தள்ளுவதால் வெற்றிகள் எளிதில் கிடைத்து வருகின்றன. அதற்கு, சூர்யகுமாரின் ஆளுமைத்திறனும் முக்கிய காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தற்போது துவங்கும் ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடர், வரும் 2026ல் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில் இருக்கும் என கருதப்படுகிறது.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் மீது, அணி பயிற்சியாளர் கவுதம் காம்பீர் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார். கடந்த 2023ல் மட்டும் 18 இன்னிங்ஸ்களில் ஆடிய சூர்யகுமார் 733 ரன்களை, 156 ஸ்டிரைக் ரேட்டுடன் குவித்து அசத்தியுள்ளார். அதில் 2 சதங்களும், 5 அரை சதங்களும் அடங்கும்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அபிஷேக் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில், திலக் வர்மா, நிதிஷ் குமார், சிவம் தூபே ஆகியோரும் அதிரடியில் வல்லவர்களாக உள்ளனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஆஸி அணியை பொறுத்தவரை, மிட்செல் ஓவன் குறிப்பிடத்தக்க வீரராக திகழ்கிறார். அவர், ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.

* இரு அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார், சிவம் தூபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.

ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபாட் (1-3 போட்டிகள்) சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன் (3-5 போட்டிகள்), டிம் டேவிட், பென் துவார்சுயிஸ் (4-5 போட்டிகள்), நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட் (1-2 போட்டிகள்0, கிளென் மேக்ஸ்வெல் (3-5 போட்டிகள்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஸ், மேத்யூ குனெமான், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ்.

Tags : India-Australia T20 ,Canberra ,T20 ,cricket ,Australia ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி