பெங்களூரு: ரஞ்சி கோப்பைக்காக, தமிழ்நாடு – நாகாலாந்து அணிகள் இடையே நடந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ரஞ்சி கோப்பைக்கான 2வது சுற்றுப் போட்டிகள் கடந்த 25ம் தேதி துவங்கின. ஒரு போட்டியில் தமிழ்நாடு – நாகாலாந்து அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 512 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் விமல் குமார் 189, பிரதோஷ் ரஞ்சன் பால் ஆட்டமிழக்காமல் 201, ஆந்த்ரே சித்தார்த் 65 ரன் குவித்தனர். அதையடுத்து, முதல் இன்னிங்சை துவக்கிய நாகாலாந்து அணி வீரர்கள் சிறப்பான போட்டியை தந்தனர்.
அந்த அணியின் தேகா நிஷ்சல் 175, இம்லிவாதி லெம்தூர் 146 ரன்கள் குவித்தனர். கடைசி நாளான நேற்று, நாகாலாந்து 446 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் 4, சந்திரசேகர் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இரு அணிகளும் 2வது இன்னிங்சை ஆட முடியாத சூழ்நிலையில், போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, எலைட் குரூப் ஏ பிரிவில் நடக்கும் அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த விதர்பா அணியுடன் தமிழ்நாடு அணி மோதவுள்ளது. வரும் நவ. 1 முதல் 4ம் தேதி வரை அப்போட்டி நடைபெறும்.
