×

டிஎஸ்பியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டு சிறை: ஐகோர்ட் கிளை தீர்ப்பு

 

தென்காசி: டி.எஸ்.பி. கார்த்திகேயனை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த 2011ல் தமிழ்நாட்டில் ரதயாத்திரை மேற்கொண்டார். அப்போது மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டி அருகே பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைத்து அவரை கொல்ல முயற்சி நடைபெற்றது. இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் முகம்மது ஹனீபா (எ) தென்காசி ஹனீபா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி ஹனீபாவிற்கு எதிராக நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்தது.

இதனிடையே வத்தலகுண்டு அருகே பதுங்கி இருந்த தென்காசி ஹனீபாவை, எஸ்ஐடி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது அவர் டிஎஸ்பியை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்றார். இதுதொடர்பாக அவர் மீது வத்தலகுண்டு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதன்பிறகு கைதான அவரிடம், மத தலைவர்களின் பெயர் பட்டியல் மற்றும் வெடி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. முடிவில் இந்த வழக்கில் இருந்து ெதன்காசி ஹனீபாவை திண்டுக்கல் நீதிமன்றம் விடுவித்தது. அதை எதிர்த்து கோவை சிபிசிஐடி-எஸ்ஐடி கூடுதல் எஸ்பி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் நம்பும் வகையில் உள்ளன. வெடிமருந்து ஆணையமும் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் உண்மையானவை என தெரிவித்துள்ளது. எனவே, அவரை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே, அவருக்குரிய தண்டனை விபரங்கள் வருகிற 28ம் தேதி தெரிவிக்கப்படும். அப்போது அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது; ஹனீபா இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது; டி.எஸ்.பி. கார்த்திகேயனை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : Tenkasi Haneepa ,DSP ,Tenkasi ,Karthikeyan ,BJP ,L.K. Advani ,Tamil Nadu ,Madurai district ,Thirumangalam Alampatti… ,
× RELATED எல்லை விரிவாக்க திட்டத்தில் ராஜிவ்...