நவிமும்பை: வரும் 30ம் தேதி நடக்கும் மகளிர் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் துவக்க வீராங்கனை பிரதிகா ராவல், மீதமுள்ள போட்டிகளில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவிமும்பையில் வங்கதேச அணியுடன் நடந்த கடைசி போட்டியின்போது பிரதிகா ராவலின் வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் இன்னும் குணமாகாததால், அடுத்து வரும் போட்டிகளில் பிரதிகா ராவல் ஆட மாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் 6 இன்னிங்ஸ்கள் ஆடியுள்ள பிரதிகா 308 ரன் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
