×

வங்கக் கடலில் அக்.27ல் உருவாகிறது புயல்: ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரைக்குத் திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தல்!!

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், ஆழ்கடலில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் இன்றைக்குள் கரைக்குத் திரும்ப சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக் கடலில் இந்த வார துவக்கத்தில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மண்டலமாக வலுப்பெறாமல், வலுவிழந்து, நேற்று இருந்த தடம் தெரியாமல் மறைந்துவிட்டது. இதனால், நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு இல்லாமல் சூரியன் தென்பட்டது.

இந்நிலையில், வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதகாவும், இது அக்.26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அக்.27ம் தேதி புயலாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் முதல் புயலாக உருவாகவிருக்கும் இந்த புயல் சின்னத்துக்கு மோந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, வரும் 27ம் தேதி காலை புயலாக வலுப்பெறும். அதாவது, திங்கள்கிழமை காலை தென்மேற்கு, மேற்கு மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், இது ஆந்திரம் நோக்கிச் சென்றாலும் தமிழகத்தில் வட மாவட்டங்களிக்கு மழைப்பொழிவு கொடுக்கும் என்றும், பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு இல்லாமல் கன மழையாக இருக்கும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த புயலுக்கு மோன்தா என்று பெயர் வைக்கப்பட உள்ள நிலையில், ஆந்திர பிரதேசத்தில் வரும் 27,28 ஆகிய இரண்டு நாட்கள் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, நிலப்பரப்புக்கு வெகு தொலைவில் நடுக் கடலில் இருப்பதால், இது புயலாக மாறி கரையைக் கடக்க அதிக சாதகங்கள் இருப்பதாகவும் புயல் சின்னமாக மாறி ஆந்திரம் நோக்கி நகர்ந்தாலும் சென்னைக்கு மழைப் பொழிவு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அக்.28 வரை காற்றழுத்த தாழ்வு நிலை மெல்ல வலுப்பெற்று ஆந்திரம் நோக்கிச் சென்றாலும் கடலில் சூறைக்காற்று, கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

Tags : Bay of Bengal ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Tamil Nadu ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...