ரேக்ஜாவிக்: அண்டார்டிகாவுடன் சேர்ந்து ஐஸ்லாந்து நாட்டில் கொசுக்கள் கிடையாது. இதனால் கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெயர் பெற்று இருந்தது. இந்த நிலையில் தலைநகர் ரேக்ஜாவிக்கில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் 3 கொசுக்கள் கண்டறியப்பட்டதாக ஐஸ்லாந்து நாட்டின் இயற்கை அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த பூச்சியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்சன் தெரிவித்துள்ளார்.
குலிசெட்டா அன்யூலேட்டா வகையை சேர்ந்த இந்த கொசுக்களில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என்று தெரிவித்துள்ளார். இந்த கொசுக்கள் சமீபத்தில் வந்த கப்பல்கள் அல்லது சரக்கு பெட்டகங்கள் வழியாக ஐஸ்லாந்திற்குள் நுழைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கொசுக்கள் இனம் ஐஸ்லாந்தில் வேறு பகுதிகளில் பரவி இருக்கிறதா என்பதை வசந்த காலத்தில் கவனிப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
