×

பரிந்துரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். அதன் பரிந்துரை அடிப்படையில் உரிய சட்டம் இயற்றப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று, ஆணவப்படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கெல்லாம் மிகத்தெளிவாக, துல்லியாக பதிலளித்து நிதியமைச்சர் சிறப்பாக இங்கே பேசியிருக்கிறார்.

அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உறுப்பினர்கள் சிலர், ஆணவப் படுகொலை குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண், இந்தத் தமிழ் மண். ‘சாதியிரண்டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’ என்கிறார் அவ்வை மூதாட்டி. இதுதான் தமிழர் தம் நெறியாகும்.

தமிழர் போற்றி வந்த பண்பாடு, இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது, சாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது, உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டது, மேல்-கீழ் என்ற வேற்றுமை விதைக்கப்பட்டது. வேற்றுமை விதைக்கப்பட்ட உடனேயே ஒற்றுமைக்கான குரல்களும் தமிழ் மண்ணில் உரக்க ஒலித்ததைக் காண்கிறோம். பல சீர்திருத்தக் கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்துள்ளன.

அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இந்த சீர்திருத்தச் சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்தார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள், அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அதிகாரம் ஆகியவற்றை தருவதன் மூலமாக யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே இந்த இயக்கங்கள் போராடின, வாதாடின, மன மாற்றங்களை செய்தன.

சாதிக்கு, மதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கங்கள் விதைத்தன. இனமும், மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியது இதன் சாதனைகள். சீர்திருத்தக் கருத்துகளை பரப்புரை செய்து வந்த அதே காலக்கட்டத்தில் அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து, சமூக சீர்திருத்த ஆட்சியை கலைஞர் நடத்தினார்.

அதன் வழித்தடத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வருகிறோம். அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறோம். பெரியார் பிறந்த நாளிலும், அம்பேத்கர் பிறந்த நாளிலும் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது. இவர்கள் பிறந்த நாளில் அனைவரும் சமூகநீதி, சமநீதி உறுதிமொழி எடுப்பது சாதாரணமான சாதனையல்ல.

தமிழ்நாடு சட்டப்பேரவை, இதே அவையில் 2025 ஏப்ரல் 29ம்தேதி அன்று உரையாற்றிய போது, ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் இருக்கும் ‘காலனி’ என்ற சொல்லை நீக்குவோம் என்று அறிவித்தேன். பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக, அவற்றை ‘சமூக நீதி’ விடுதிகளாகப் பெயர் மாற்றியிருக்கிறோம்.

இந்திய பிரதமரை சமீபத்தில் நேரில் சந்தித்து, முக்கியமான ஒரு கோரிக்கையை வைத்தேன். “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதிப் பெயரில், இறுதி எழுத்தில் முடிவடையும் ‘இன்’ என்பதற்குப் பதிலாக ‘இர்’ என விகுதி மாற்றம் செய்து, அந்தச் சமூக மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழி செய்யும் வண்ணம் ஒன்றிய அரசு உரிய சட்டம் இயற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்பது தான் அந்தக் கோரிக்கை.

சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடமை, பொது உரிமை, கல்வி உரிமை, அதிகார உரிமை ஆகிய கொள்கைகள் தான் வேற்றுமையை, பகைமையை விரட்டும். அதனைத் தான் நாங்கள் செய்து வருகிறோம். இதன் மூலமாகத் தான் சமத்தும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆனால், இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனையடைய வைத்துள்ளன. இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள், நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது. உலகம் அறிவுமயமாகி வருகிறது.

‘ஆனால் அன்புமயம் ஆவதை எது தடுக்கிறது?’ என்பதுதான் இன்று சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது.  உலகம் முழுக்க பரவி, அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக்கொள்வது என்ன நியாயம் என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வியாக அமைந்திருக்கிறது. எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க இயலாது. கொல்வதை மட்டுமல்ல பகைப்பதை, சண்டை போட்டுக்கொள்வதை, அவமானப்படுத்துவதை என எதையும் பண்பட்ட, வளர்ச்சியுற்ற ஒரு சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. நம் சமுதாயத்தையே தலைகுனியச் செய்து விடுகிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

இந்த வேதனையைத்தான் நமது உறுப்பினர்கள் பலரும் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறீர்கள். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும், எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இந்த அநீதியைத் தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது. ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படுகொலைகளுக்குச் சாதி மட்டுமே காரணமல்ல, இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன.

எதன்பொருட்டு நடந்தாலும், கொலை, கொலை தான். அதற்கான தண்டனைகள் மிக, மிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். யாரும், எவரும், எதன்பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக் கூடாது என்பதை காவல் துறைக்கு உத்தரவாகப் போட்டுள்ளோம். எனவே, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது.

அதே நேரத்தில், இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல, அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும்.

மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை, அனைவரும் சமம், பாலின சமத்துவமும், வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திற்கு ஒரு அடையாளம் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும் அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

சீர்திருத்தப் பரப்புரையும், குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.இதுகுறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும்.

இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், ச‌‌ட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* ஆணவ படுகொலை என்ற கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல, அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும்.

* நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும்.
* சமுதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும்.

* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை, அனைவரும் சமம், பாலின சமத்துவமும், வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திற்கு ஒரு அடையாளம் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

Tags : Chief of Legislation ,M.O. K. Stalin ,Chennai ,Judge ,K. N. ,Pasha ,Chief Minister of the Council ,K. Stalin ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...