செய்யாறு, அக். 18: செய்யாறு சப் கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் அம்பிகா ஜெயின் தலைமையில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பட்டாசு சில்லரை விற்பனை மற்றும் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சப்-கலெக்டர் அம்பிகா ஜெயின் பேசுகையில், ‘விபத்து நிகழாவண்ணம் வெடி பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். தீ தடுப்பு உபகரணங்கள் சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும். அரசு அனுமதித்த அளவைவிட கூடுதலாக வெடிபொருட்கள் இருப்பில் வைக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வெடிபொருட்கள் அருகில் வைத்திருக்ககூடாது. அரசு அனுமதித்த விற்பனையாளர்கள் தவிர மற்றவர்கள் வெடிபொருட்கள் விற்பனை செய்யக்கூடாது’ என்றார். மேலும் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை நடைபெறகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அரசு அனுமதி அளித்துள்ள நேரங்களில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கபடுவதை உறுதி செய்யுமாறும், தீயணைப்பு துறையினர் அனைத்து தீ தடுப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.
