திருவண்ணாமலை, அக். 18: திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பு 2025-26ம் ஆண்டு காரீப், சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ராபி பருவத்தில் சம்பா நெல் பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால், ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்புகளை ஈடு செய்வதற்கும், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விவசாயிகள் ராபி பருவ பயிரான சம்பா நெல் பயிருக்கு காப்பீட்டு செய்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ள ஓர் ஏக்கருக்கு ரூ.538 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். வரும் நவம்பர் மாதம் 15ம் தேதிக்குள் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய சிட்டா, நடப்பாண்டு பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அனைத்து பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் பயிர் காப்பீட்டு பதிவு செய்யலாம். மேலும், விவரங்களை தெரிந்து கொள்ள அருகில் உளள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
