வேலூர், அக்.13:கடந்த 2014 முதல் செப்டம்பர் 2018 வரை மேல்நிலை 2ம் ஆண்டு பொதுத்தேர்வுகள், துணைத்தேர்வுகள் எழுதி, உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அரசுத்தேர்வுகள் துறையால் நடத்தப்பட்ட 2014ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2018ம் ஆண்டு வரையிலான மார்ச், ஜூன், செப்டம்பர் என அனைத்து பருவங்களுக்கு உரிய மேல்நிலை பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் குறிப்பிட்ட சதவீதம் உரிமை கோரப்படாமல் சென்ைன அரசு தேர்வுகள் இயக்ககத்தில் உள்ளன.
இவ்வாறு பெருமளவில் உள்ள உரிமை கோரப்படாத மேல்நிலை 2ம் ஆண்டு தனித்தேர்வகளின் மதிப்பெண் சான்றிதழ்களை உடனடியாக அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனாலும், உரிமைக்கோராத தனித்தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட மார்ச் 2014ம் முதல் 2018 செப்டம்பர் வரை மார்ச், ஜூன், செப்டம்பர் பருவங்களுக்கு உரிய மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஜனவரி 10ம் தேதி வரை உரிய ஆளறி சான்றுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி துணை இயக்குனரை அணுகி பெற்றுக் கொள்ளலாம். அதற்கு பின்னரும் உரிமை கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் என்று வேலூர் அரசு தேர்வுகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
