×

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; சிறப்பு குழு 5வது நாளாக விசாரணை: தவெக நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினரும் கடந்த 5ம் தேதி முதல் கரூரில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை பயணியர் மாளிகைக்கு வரவழைத்து அவர்களிடம் சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து விசாரித்தனர். இதைதொடர்ந்து கரூரில் செயல்படும் உள்ளூர் டிவி சேனல்கள் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்தது. குழுவில் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவர், 10 டிவி சேனல் அலுவலகங்களுக்கு சென்று உரிமையாளர்களிடம் நேற்று முன்தினம் சம்மன் வழங்கினார்.

அதன்படி 7 உள்ளூர் டிவி சேனல்களின் உரிமையாளர்கள் சம்மனுடன் நேற்று பயணியர் மாளிகை வந்தனர். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது தவெக சார்பில் உங்களுக்கு பிரசாரம் குறித்து எதுவும் விளம்பரம் தரப்பட்டதா, நிகழ்ச்சிக்கு எத்தனை மணிக்கு ஊழியர்களை அனுப்பினீர்கள், யார் யாரை வீடியோ எடுக்க அனுப்பினீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.

இதையடுத்து விஜயின் பிரசார கூட்டத்திற்கு முன்பும், அதன் பின்பும் அதாவது மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் டிவி சேனல் உரிமையாளர்கள் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் எஞ்சிய 3 டிவி சேனல்களின் உரிமையாளர்கள் இன்று காலை ஆஜராகினர். அவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியதுடன் வீடியோ பதிவுகளை பெற்று கொண்டனர்.

கரூரில் பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 8 பேருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 15 பேருக்கு தலா ரூ.50,000 என மொத்தம் 23 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.15.50 லட்சம் காசோலையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வழங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பவுன்ராஜூக்கு ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்து விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதாக கூறி ஜாமீன் மனுவை நீதிபதி இளவழகன் தள்ளுபடி செய்தார்.

அதேபோல் வேலுசாமிபுரத்தில் நெரிசல் ஏற்பட்ட தினத்தன்று காயமடைந்தவர்களை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த கார் டிரைவரான தவெக நிர்வாகி மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர். இவர் கரூர் கோர்ட்டில் ேநற்று நீதிபதி பரத்குமார் முன்னிலையில் சரணடைந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் மணிகண்டனை ஜாமீனில் விடுவித்தார்.

* 450 கிலோ செருப்புகள்
நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரத்தில் சிதறிக்கிடந்த செருப்புகள் விசாரணைக்காக அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று அந்த செருப்புகளை அகற்றும் பணி நடந்தது. அகற்றப்பட்ட செருப்புகளின் எடை 450 கிலோ என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Vijay ,Special Committee ,Dweka ,Karur ,Karur Velusamipura ,Vijay Prasara ,Aruna Jegadeesan ,
× RELATED டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை...