புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா இப்போது கோடீஸ்வரர்களின் புதிய மையமாக மாறி வருகிறது. நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு அறிக்கையும் இந்தியாவில் சொத்து குவிப்பு குறித்து எச்சரிக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய போராடும் அதே வேளையில் 1,687 பேர் மட்டுமே நாட்டின் செல்வத்தில் பாதியை கொண்டுள்ளனர்.
மோடி அரசின் பொருளாதார கொள்கைகளால் உருவாக்கப்படும் இந்த மிகப்பெரிய சொத்து குவிப்பு, நாட்டில் மிகப்பெரிய பொருளாதார சமத்துவமின்மையை ஏற்படுத்துகிறது. இந்த சமத்துவமின்மை பரவலான சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தியை உருவாக்குகிறது. பிரதமர் மோடியின் தவறான கொள்கைகளால் அவரது சில தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே நன்மை அடைகின்றனர்.
இது ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீதான நேரடி தாக்குதலும் கூட. பொருளாதார அதிகாரம் சிலர் கைகளில் குவியும் போது, அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாக எடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் படிப்படியாக ஜனநாயகம் மற்றும் வளர்ச்சி செயல்முறையிலிருந்து விலக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
