டெட்ராய்ட்: உடல் பருமனைக் காரணம் காட்டி சவாரிக்கு மறுத்த ஓட்டுநரால் சர்ச்சையில் சிக்கிய லிஃப்ட் நிறுவனம், ராப் பாடகியுடன் சமரசம் செய்துகொண்டுள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்டைச் சேர்ந்தவரும், டேங்க் டெமாஸ் என்றழைக்கப்படுபவருமான ‘ராப்’ இசைப் பாடகி டாஜுவா பிளாண்டிங், கடந்த ஜனவரி மாதம் நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்வதற்காக லிஃப்ட் நிறுவனத்தின் காரை முன்பதிவு செய்தார். ஆனால், காரை ஓட்டிவந்த ஓட்டுநர், அவரது உடல் பருமனைக் காரணம் காட்டி காரில் ஏற்ற மறுத்துள்ளார். ‘நீங்கள் காரில் ஏறி அமர்ந்தால் டயர்கள் எடையைத் தாங்காது’ என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த உரையாடலை பாடகி தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, மிச்சிகன் மாநிலத்தின் எலியட்-லார்சன் சிவில் உரிமைச் சட்டத்தின் கீழ், எடை அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி லிஃப்ட் நிறுவனத்தின் மீது அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த பாகுபாடு தொடர்பான வழக்கு தற்போது சமரசத்தில் முடிவுக்கு வந்துள்ளது. சமரசத்தின் விதிமுறைகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் லிஃப்ட் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமரசத்திற்குப் பிறகு, பாடகி டாஜுவா பிளாண்டிங் சொந்தமாக ஒரு வேனை வாங்கி, தனக்கென ஒரு ஓட்டுநரையும் பணியமர்த்தியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து லிஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எல்லாவிதமான பாகுபாடுகளையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்; பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு எங்கள் நிறுவனத்தில் இடமில்லை’ என்றும் தெரிவித்துள்ளது.
