நியூயார்க்: டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் தந்தை மீது அவரது குழந்தைகளே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நண்பரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும், அவரது தந்தை எரோல் மஸ்க்கிற்கும் இடையே நீண்ட காலமாக சுமூகமான உறவு இல்லை. எரோல் மஸ்க்கை ‘ஒரு பயங்கரமான மனிதர்’ என்றும், ‘நினைத்துப் பார்க்க முடியாத தீய செயல்களைச் செய்தவர்’ என்றும் எலான் மஸ்க் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
தற்போது அவருடன் பேசுவதையே நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில், எரோல் மஸ்க் மீது தற்போது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் (79), தனது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகள் மீது 1993ம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டில் 4 வயது வளர்ப்பு மகளிடம் தவறாக நடந்துகொண்டது, 2023ம் ஆண்டில் தனது 5 வயது மகனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று முறை காவல்துறை விசாரணை நடந்தபோதும், அவர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள எரோல் மஸ்க், ‘இவை அனைத்தும் பொய்யானவை, முட்டாள்தனமானவை. எனது மகன் எலான் மஸ்க்கிடம் இருந்து பணம் பறிப்பதற்காக, எனது குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளைத் தூண்டிவிட்டு பொய் கூற வைக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.
