சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஒரு மாதத்திற்குள் அதிமுகவில் இருந்து 2 முன்னாள் எம்பிக்கள் வெளியேறி திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவரான மைத்ரேயன், கடந்த 1991ம் ஆண்டு பாஜவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இதையடுத்து 1999ம் ஆண்டு பாஜவிலிருந்து விலகிய மைத்ரேயன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்தார். மைத்ரேயன், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுக பிளவுபட்டபோது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார். ஓபிஎஸ் அணியில் இருந்து, இபிஎஸ் அணியுடன் மோதல் போக்கைக் கடைபிடித்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு பாஜவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். நேற்று காலை வரை அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த சூழலில், நேற்று காலை 10.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
முன்னதாக பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்த அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஜூலை 21ம் தேதி திமுகவில் இணைந்தார். அதேபோல அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான், அண்மையில் திமுகவில் இணைந்தார். இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மற்றொரு முன்னாள் எம்பியும் திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவிற்கு பின்னடைவாக உள்ளது.
இதற்கிடையில், மைத்ரேயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். அதிமுகவின் போக்கு சரி இல்லை. டெல்லியின் கட்டளைக்கு அடிபணிந்த இயக்கமாக அதிமுக இன்றைக்கு மாறிவிட்டது.
கூட்டணி முடிவுகளை கூட பழனிசாமியால் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். காசு கொடுத்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தை கண்டு, தன்னை ஒரு எம்.ஜி.ஆர் போலவும், அம்மையார் ஜெயலலிதா போலவும் நினைத்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு ஒரே ஒரு உதாரணம், உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது. ‘‘மண், மொழி, மானம் காக்க ஓரணியில் திரண்டு இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
* மைத்ரேயன் நீக்கம்: எடப்பாடி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், அமைப்புச் செயலாளர் மைத்ரேயன், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
