வேலூர்: அரசு பஸ்சில் சென்றபோது கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி மாலை கல்லூரி முடிந்து சேர்க்காட்டில் இருந்து திருவலம் நோக்கி அரசு பஸ்ஸில் மாணவி பயணம் செய்தார். இந்த பஸ்ஸில் கண்டக்டராக காட்பாடி அடுத்த மகிமண்டலம் திகுவாபள்ளியை சேர்ந்த காண்டீபன்(40) என்பவர் பணியில் இருந்தார். இவர், பஸ்சில் வந்த மாணவியிடம், இரட்டை அர்த்தத்தில் பேசியதுடன், சில்மிஷத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், வேதனையடைந்த கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் காட்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்டக்டர் காண்டீபனை நேற்று முன்தினம் இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
