×

தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துங்கள்… அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அருகில் மருத்துவமனை உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என போராட்டக்காரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடுவோரை அப்புறப்படுத்த சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாங்கள் உங்கள் கோரிக்கைக்கு எதிராகவோ அல்லது போராட்டத்திற்கு எதிராகவோ இல்லை. போராட உரிமை இருந்தாலும் சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் அமைதியாக போராட்டம் நடத்தலாம்,” என்று உத்தரவிட்டனர். ஆனால் தமிழக அரசோ தூய்மை பணியாளர்களை அகற்ற போலீசாரை பயன்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லையெனவும் தூய்மை பணியாளர்களே கலைந்து செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பதாக தமிழக அரசு சார்பாக நீதிம்ன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Chennai ,Chennai Ribbon House ,Chennai Municipality ,
× RELATED தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர்...