புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்- ரஷ்ய அதிபர் புடின் இடையே வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நேரடி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமைதி முயற்சிகளுக்கு பிரதமர் மோடியின் ஆதரவை ஜெலன்ஸ்கி பாராட்டினார்.
ஜெலன்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது கருத்துக்களை கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மோதலுக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு தேவை என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தேன். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சாத்தியமான அனைத்து பங்களிப்பை வழங்கவும், உக்ரைனுடனான உறவை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது’’ என்றார்.
