- உச்ச நீதிமன்றம்
- பாலாறு
- புது தில்லி
- பாலர் நதி
- வேலூர்
- ராணிப்பேட்டை
- திருப்பத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வேலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்
புதுடெல்லி: தமிழ்நாட்டில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக பாலாறு ஓடுகின்றது அதனை சுற்றி இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை பாலாற்றில் கலப்பதாகவும் எனவே இத்தகைய மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராகி இருந்தார்கள்.
இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,பாலாற்றில் மாசுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என கேட்டனர். இதையடுத்து அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பூர்ணிமா கிருஷ்ணா, கழிவுநீர் பாலாற்றில் கலப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை மூட உத்தரவிடப்படுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தொழிற்சாலை கழிவுகள் மட்டுமல்லாமல் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் கலப்பது என்பதும் ஆறுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் இயற்கையை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், அது நிச்சயம் ஒரு நாள் பழி வாங்கிவிடும். எனவே இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஆற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் யாரையும் விடக்கூடாது. குறிப்பாக அதில் எந்தவித சமரசமும் கூடாது. இந்த விவகாரத்தில் அனைவரது கூட்டு முயற்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எனவே பாலாறு விவகாரத்தில் ஒன்றிய மாசு கட்டுப்பாடு ஆணையம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போன்று இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள். மனுதாரர்களிடமும் உங்களது யோசனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
