- யூனியன் அரசு
- கனிமொழி
- எஸ் வெங்கடேசன்
- மக்களவை
- புது தில்லி
- திமுக
- மதுரை
- Keezhadi
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை…
புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கனிமொழி மற்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் எழுப்பிய கேள்வியில், தமிழ்நாட்டில் உள்ள கீழடி தொல்லியல் தளத்தின் அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன, ஜனவரி 2023ல் தயாரிக்கப்பட்டு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கீழடி வரைவு அகழ்வாராய்ச்சி அறிக்கை மீது ஒன்றிய அரசு ஆட்சேபனைகள் ஏதும் எழுப்பப்பட்டதா, கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி தாக்கல் செய்யப்பட்ட அசல் அறிக்கையை மதிப்பாய்வு செய்ய அல்லது மாற்றியமைப்பதற்காக தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரி அல்லது அதிகாரிகள் பற்றிய விவரங்கள் என்ன?, கிமு 580க்கு முந்தைய மிகவும் மேம்பட்ட நாகரிகத்தை சுட்டிக்காட்டும் பல அகழ்வாராய்ச்சி தளங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் இருக்கும் நிலையில், கீழடியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதா ?என்று கேட்டிருந்தனர்.
இதையடுத்து அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாட்டில் கீழடியில் 2014-15 மற்றும் 2015-16ல் நடைபெற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் அறிக்கை ஜனவரி 2023ம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பெறப்பட்டது. அதன் பின்னர் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிபுணர்கள் சரிபார்ப்புக்கு அந்த அறிக்கை உட்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆய்வு அம்சங்களிலும் நேர்மை, நியாயம் மற்றும் நெறிமுறைகளை உறுதி செய்வதற்கு இந்த செயல்முறை அவசியமாகிறது. மேலும் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை தாமதப்படுத்தவோ அல்லது குறைக்கவோ இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
முதல் இரண்டு பருவங்களுக்கான அகழ்வாராய்ச்சி அறிக்கை நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு… ஆய்வு முறைமை, காலவரிசை, விளக்கம், விளக்கக்காட்சி மற்றும் பகுப்பாய்வு நுண்மை போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து அகழ்வாராய்ச்சியாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடி தளத்தின் தொல்பொருள் திறனைக் கருத்தில் கொண்டு, 2014 மற்றும் 2017க்கு இடையில் இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித் துறையால் அகழ்வாராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2018 முதல், தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை அந்த இடத்தில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்து வருகிறது. இருப்பினும், மாநில தொல்பொருள் துறையின் இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.இவ்வாறு தெரிவித்தார்.
