குண்டல்பேட்டை: செல்பி எடுக்க முயன்றவரை காட்டு யானை தாக்கிய சம்பவம் பண்டிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பண்டிபுரா தேசிய புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் புலிகள், யானைகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதனிடையில், தமிழகத்தில் இருந்து குண்டல்பேட்டைக்கு வரும் சாலையின் ஓரத்தில் காட்டு யானை நின்று கொண்டிருந்தது.
இதை பார்த்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த யானையின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த யானை அவரை விரட்டியுள்ளது. இதன் காரணமாக பீதியடைந்த அந்த நபர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்துள்ளார். இருந்தும், அந்த யானை விடாமல் துரத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அந்த யானை அவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. உடனிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துள்ளார்.
யானையுடன் செல்பி எடுக்க முயன்றது தொடர்பாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களை சேகரித்து வருவதாக பண்டிபுரா புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் பிரபாகரன் தெரிவித்தார். இதனிடையே, யானைக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் மொபைலில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
