×

இயந்திர கோளாறால் சென்னையில் விமானம் தரையிறங்கியபோது மற்றொரு விமானம் குறுக்கீடு: விரிவான விசாரணை நடத்த வேணுகோபால் எம்பி டிவிட்

சென்னை: திருவனந்தபுரம்-டெல்லி ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்திலிருந்து 5 எம்பிக்கள் உள்பட 150 பயணிகளுடன் புறப்பட்டு, இரவு 10 மணியளவில் நடுவானில் பறந்தது. அப்போது, திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, நள்ளிரவு 11.30 மணியளவில், அவசரமாக தரையிறங்கியது. இதனால் 150 பயணிகளும் உயிர் தப்பினர். இதற்கிடையே, ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்தபோது, மற்றொரு விமானம் திடீரென அதே ஓடு பாதையில் குறுக்கிட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி, உடனடியாக சற்றும் தாமதிக்காமல் விமானத்தை மீண்டும் உயரே பறக்க செய்து விட்டு, அதன் பின்பு விமானம் மீண்டும் பாதுகாப்பாக சென்னையில் தரையிறங்கியது. இது பயணிகளிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த கே.சி.வேணுகோபால் எம்பி, தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; ஏர் இந்தியா விமானம் நடுவானில் இயந்திர கோளாறு ஆகி, சென்னை விமான நிலைய பகுதியில் தத்தளித்தது, அந்த விமானம் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்க தழ்வாக பறந்த போது, மற்றொரு விமானம் திடீரென அதே ஓடு பாதையில் குறுக்கிட்டு ஓடியது, இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் உயர பறக்கச் செய்துவிட்டு, இரண்டாவது முறையாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியது, அனைத்தையும் டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முழுமையாக விசாரணை நடத்தி, இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதற்கு ஏர் இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவித்ததோடு, அதேபோன்ற சம்பவம் நடக்கவில்லை. அதுபோல் நடந்தாலும், அதை சமாளிப்பதற்கு, திறமையான அனுபவம் வாய்ந்த விமானிகள் எங்கள் விமானத்தை இயக்கிக் கொண்டு இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Chennai ,Venugopal ,Thiruvananthapuram ,Delhi ,Air India ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...