திருப்போரூர், ஆக.11. திருப்போரூரை அடுத்த தையூர் ஊராட்சிக்குட்பட்ட கோமான் நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மகன் பாண்டி மதுரை (எ) சூர்யா (35). அதே பகுதியைச் சேர்ந்த இவருடைய நண்பர் காந்தா (35) இருவரும் கடந்த, 6ம் தேதி மோட்டார் சைக்கிளில், கேளம்பாக்கத்திலிருந்து திருப்போரூர் நோக்கி பழைய மாமல்லபுரம் சாலையில் தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாண்டி மதுரை (எ) சூர்யா ஓட்ட அவருடைய நண்பர் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
தையூர் கோமான் நகர் பகுதிக்கு செல்வதற்காக வலதுபுறம் திரும்ப முயற்சித்த போது, அதே திசையில் கேளம்பாக்கத்தில் இருந்தது திருப்போரூர் நோக்கி ராமகிருஷ்ணன் என்பவரது கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கியெறியப்பட்டனர். இதில், சூர்யாவுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. உடன் வந்த நண்பர் காந்தாவுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. உடனடியாக சூர்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் 2 இதய வால்வுகள், 2 கண்கள், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் உள்ளிட்ட 7 உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து சூர்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் அரசு சார்பில் அவருடைய உடலுக்கு திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், தையூர் ஊராட்சிமன்ற தலைவர் குமரவேல், தையூர் கிராம நிர்வாக அலுவலர் மோகன் மற்றும் அரசு ஊழியர்கள் சூர்யா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
