சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நேற்று வாழ்த்து பெற்றார். அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா, வர உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜ இடையே மீண்டும் கூட்டணி அமைத்ததால் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 21ம் தேதி திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த அன்வர்ராஜாவுக்கு, 20 நாட்களில் திமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் திமுக இலக்கிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்த நிலையில், திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்ட அன்வர் ராஜா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்து பெற்றார். திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி இருந்து வந்தார். அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் திமுக இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
