×

வாக்களிக்கும் உரிமை இல்லாத ஊடுருவல்காரர்களே காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் வாக்கு வங்கி: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடும் தாக்கு

சீதாமர்ஹி: “ஊடுருவல்காரர்களை நம்பியே காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் வாக்கு வங்கி உள்ளது” என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடுமையாக தாக்கி உள்ளார். பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ஊடுருவல்காரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. அதனால்தான் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்து ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி வருகிறது. ஆனால் காங்கிரசும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இதை எதிர்க்கின்றன.

ஊடுருவல்காரர்களை நம்பியே காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சியின் வாக்கு வங்கிகள் உள்ளன. அதனால்தான் இதை இரண்டு கட்சிகளும் எதிர்க்கின்றன” என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்தன. ஆனால் தற்போது மோடி ஆட்சியில் இந்தியா மாறி விட்டது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் நம் ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளின் மறைவிடங்களுக்கே சென்று அவர்களை கொன்றுள்ளனர். ஆனால் இதை ஆர்ஜேடியும், காங்கிரசும் எதிர்க்கின்றன.. ஆர்ஜேடி கட்சி பீகாரின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை” என்று கடுமையாக தாக்கி பேசினார்.

Tags : Congress ,RJD ,Union Minister ,Amit Shah ,Sitamarhi ,Bihar ,
× RELATED வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில்...