புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை “தமிழ்நாடு முழுவதும், பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்” என கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டு இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கதிரவன் என்பவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தீர ஆய்வு செய்த பிறகுதான் உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பாக அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக அரசு இடத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்?” என்று கேள்வியெழுப்பினர். ஏற்கனவே இதேபோன்ற ஒரு விவகாரத்தில் ஆந்திரா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. எனவே கொடிக் கம்பம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான முறையில் பிறப்பித்த இந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதற்கு தடை விதிக்கவும் முடியாது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
