×

பாஜவுக்கு எதிராக செய் அல்லது செத்து மடி: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் பேசுகையில், மக்களாட்சி முறையை அழிப்பதற்கான நடவடிக்கையில் பாஜவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது ஈ.டி., சிபிஐ., வருமான வரி என ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவி மிரட்டி பணிய செய்து அதன் மூலம் ஆட்சி யில் பாஜ அமர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேர்மையான முறையில் பதவி ஏற்கவில்லை. திருட்டுத்தனமாக பதவி ஏற்றுள்ளார். எனவே, பிரதமர் பதவி வகிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.

தேர்தலில் நடந்த வாக்கு திருட்டுகள் வெளியே வந்துள்ளதால் பாஜவின் தவறுகள் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், இதற்குமுன்பு காந்தி அடிகள் தலைமையில் ஆங்கிலேய வெள்ளையனே வெளியேறு என போராட்டம் நடத்தினோம். அதே போன்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் இந்தியா கூட்டணி தலைவர்கள் காந்தி அடிகள் கூறியது போல் செய் அல்லது செத்துமடி என பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டும். வரும் திங்கட்கிழமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கார்கே பேசினார்.

* எனது தோல்விக்கு காரணம் தெரிந்தது ராகுலுக்கு நன்றி
கார்கே பேசுகையில், ‘12 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற எனக்கு 2019ல் முதல் தோல்வி கிடைத்தது. ஏன் தோல்வி அடைந்தேன் என்பதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது.நான் போட்டியிட்ட கலபுர்கி எம்பி தொகுதியிலுள்ள ஐந்து சட்ட பேரவை தொகுதியிலும் இது போல் திட்டமிட்டு வாக்கு திருட்டு நடந்துள்ளது. வாக்கு திருட்டு மோசடியை வெளியே கொண்டு வந்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்றார்.

* தேர்தல் அதிகாரியிடம் மனு
பெங்களூரு சுதந்திர பூங்காவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குரிமை பேரணி நடந்தது. ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் மகாதேவபுரா தொகுதியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டிகே சிவகுமார் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த பிறகு நிருபர்களிடம் டிகே சிவகுமார் கூறியதாவது: எம்பி தேர்தலில் நடந்த முறைகேடுகள், அதற்கான ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். இனி தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : BJP ,Mallikarjun Kharge ,Bengaluru ,Congress ,All India Congress ,President ,Election Commission ,ED ,CBI ,Income Tax ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...