×

இந்தியா மீது கூடுதல் வரி ஏன்? வெள்ளை மாளிகை அதிகாரி விளக்கம்

நியூயார்க்: கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் பணத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது ஏற்கனவே 25 % பரஸ்பர வரி விதித்தார். அதன் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் அதிபர் டிரம்ப் வரி விதித்துள்ளார். அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 25% கூடுதல் வரி விதித்து கடந்த 6ம் தேதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.டிரம்பின் இந்த அறிவிப்பால், அமெரிக்காவில் அதிக இறக்குமதி வரி விதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில், இந்தியா தான் அதிகட்சமாக 50% வரியை எதிர்கொள்கிறது.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவ்ரோ,‘‘ இந்தியா மீதான பரஸ்பர வரி மற்றும் கூடுதல் வரி என்பது வேறாகும். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா மறுத்தது. மேலும் இது ஒரு தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னையாகும். வரிகளின் மகாராஜா இந்தியாவாகும். அமெரிக்க தயாரிப்புகளுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா. தங்கள் தயாரிப்புகளை வாங்க அமெரிக்கா இந்தியாவிற்கு ஏராளமான டாலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது.

பின்னர் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்க அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்துகிறது. ரஷ்யா தனது ஆயுதங்களுக்கு நிதியளிக்கவும், உக்ரேனியர்களைக் கொல்லவும் இந்தியாவில் இருந்து வரும் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்துகிறது. பொருளாதார பாதுகாப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் இடையிலான தொடர்பை அதிபர் புரிந்துகொள்கிறார். எனவே தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். உள்நாட்டுப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், ‘‘ ரஷ்ய ராணுவத்திற்கு மிகப்பெரிய நிதியளிப்பவர்களில் இந்தியாவும் ஒன்று’’ என்றார்.

* பேச்சு நடத்த வாய்ப்பு இல்லை டிரம்ப் திட்டவட்டம்
வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், வரி தொடர்பான பிரச்னை சரியாகும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு துறை துணை செய்தி தொடர்பாளர் டோமி பிகாட், ‘‘இந்தியா ஒரு மூலோபாய கூட்டாளி. அந்த நாட்டுடன் நாங்கள் முழுமையான மற்றும் வெளிப்படையான உரையாடலில் ஈடுபடுகிறோம். அது தொடரும். வர்த்தக ஏற்றத்தாழ்வு மற்றும் இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்குவது குறித்து தனது கவலைகளை அதிபர் டிரம்ப் வெளிப்படுத்தினார்’’ என்றார்.

Tags : India ,White House ,New York ,US ,President Trump ,Russia ,Ukraine ,
× RELATED ஆஸ்திரேலியாவில் பெரியார் நூல் வெளியீட்டு விழா நாளை நடக்கிறது!!