×

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலோகநாதர் கோயிலை புனரமைப்பு செய்யக்கோரி பெண்கள் தியானம்

மாமல்லபுரம், ஆக 6: மாமல்லபுரம் அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலோகநாதர் கோயிலை புனரமைப்பு செய்யக் கோரி பெண்கள் தியானம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாமல்லபுரம் அடுத்த மணமை கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலோகநாதர் கோயில் உள்ளது. இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோயிலை, சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டதால், 20 ஆண்டுகளாக செடி, கொடிகள் வளர்ந்து பேய் வீடு போல் காட்சியளித்தது. இக்கோயிலை, புனரமைப்பு செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இந்து சமய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவலோகநாதர் கோயிலை புனரமைத்து தரக்கோரியும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கோயில் முன்பு திரண்டனர். பின்னர், திடீரென கோயிலுக்குள் நுழைந்து கொடிமரம் அருகே தியானத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு 1 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது. இது குறித்து, தகவலறிந்த தலசயன பெருமாள் கோயில் (பொ) செயல் அலுவலர் செல்வகுமார், மேலாளர் சந்தானம் ஆகியோர் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இன்னும் ஒரு மாதத்துக்குள் புனரமைப்பு பணி தொடங்கப்படும் என கூறினார். அப்போது, தியானத்தில் ஈடுபட்ட பெண்கள் இன்னும் ஒரு மாதத்துக்குள் புனரமைப்பு பணிகள் தொடங்கவில்லை என்றால், சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை மறித்து மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Shivalokanathar temple ,Mamallapuram ,Manmai ,Shivalokanathar ,Government Adi Dravidar Welfare Higher Secondary School ,Hindu Religious and Endowments Department ,
× RELATED மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் ரூ.3...