ஈரோடு, ஆக.29: 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்க வேண்டும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நிபந்தனை தளர்த்தி கடன் வழங்க வேண்டும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும்.
சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாத செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளியாக சேர்க்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சம உரிமை கிடைக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அதை உறுதிப்படுத்த வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கண்டறிந்து அதை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோர் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விசில் அடித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
The post 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி; மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.