×

6 இடங்களில் அவசர கால நிவாரண முகாம்கள் அமைப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளதாலும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6 இடங்களில் அவசர கால நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு செய்தார்.

கர்நாடகா, கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.60 லட்சம் கன அடியாக அதிகரித்து இருந்தது. இதனால் மெயின் அருவி, சினியருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும், அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி கரையோரப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல்லில் வரும் 2ம்தேதி நடக்கவுள்ள ஆடிபெருக்குவிழா ஏற்பாடுகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், தாசில்தார் லட்சுமி, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனிருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ளதால், கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி விட்டன. இதனால், உபரிநீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.60 லட்சம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து, டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 1.60 லட்சம் கனஅடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து, ஒகேனக்கல் தொடக்கப்பள்ளி, ஊட்டமலை நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் 3 தனியார் மண்டபங்கள் என 6 இடங்களில் அவசர கால நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு மக்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு அலுவலர்கள் செய்துள்ளனர். மேலும், ஒகேனக்கல் முதல் நாகமரை வரையிலான பகுதிகளை, அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் சுற்றுவட்டார 14 கிராமங்களில், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறது,’ என்றனர்.

The post 6 இடங்களில் அவசர கால நிவாரண முகாம்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : of emergency relief ,Dharmapuri ,Dharmapuri district ,Okanagan Cauvery river ,Collector ,Shanti ,Karnataka ,emergency relief camps ,Dinakaran ,
× RELATED கணவனை கடத்தி சித்ரவதை செய்து கொன்ற மனைவி? கள்ளக்காதல் விவகாரமா