அம்பத்தூர்: அம்பத்தூரில் ஒரேநாளில் அடுத்தடுத்து 3 கோயிலில் சிலையில் இருந்த 2 சவரன்தாலி மற்றும் உண்டியல்கள் உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் அருகே சூரப்பட்டு மேட்டூர் பகுதியில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில், நேற்று முன்தினம் காலை அர்ச்சகர் வழக்கம்போல் நடையை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, கோயில் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்க தாலி மாயமாகி இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிலையின் மீது இருந்த கைரேகைகள் மற்றும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அதே பகுதியில், அமைந்துள்ள எல்லையம்மன் கோயிலிலும் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அதேபோல், சூரப்பட்டு எழில் நகரில் அமைந்துள்ள விநாயகர் கோயிலிலும் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஒரே நாளில் 3 கோயில்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து, அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post 3 கோயிலில் மர்ம நபர்கள் கைவரிசை சிலையில் இருந்த 2 சவரன் தாலி, உண்டியல் பணம் கொள்ளை appeared first on Dinakaran.