×

வீடு வழங்கும் திட்டத்தில் போலி ஆணை ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது: மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில், 19 பயனாளிகளுக்கு போலி ஆணை வழங்கிய விவகாரத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள சிறுமாங்காடு ஊராட்சியில் 19 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான பணி ஆணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆணையை பெற்றவர்கள் சிலர் வீடு கட்டி முடித்துள்ளனர். வீடு கட்டி முடிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைக்கப்பெறவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த பயனாளிகள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாங்கள் வீடு கட்டி முடித்துள்ளோம். ஆனால், பணம் கிடைக்கவில்லை என்று புகார் மனு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள், புகார் மனுவை வைத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையினை ஆய்வு செய்தனர். அப்போது, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை போலியானது என்று தெரியவந்தது. இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், சிறுமாங்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கன்னியப்பன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வாசு ஆகிய இருவரும் போலியான பணி ஆணை தயாரித்து 19 பேருக்கு வழங்கியது தெரியவந்தது. இதனையடுத்து, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கன்னியப்பன், வாசு ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் போலியான பணி ஆணையினை தயாரித்து பயனாளிகளுக்கு வழங்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வீடு வழங்கும் திட்டத்தில் போலி ஆணை ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது: மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Sriperumbudur ,
× RELATED மேலமையூர் ஊராட்சி எம்ஜிஆர் நகரில்...