×

ரூ.382 கோடியில் 1459 அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் ரூ.541 கோடியில் 4,184 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ரூ.382.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 1459 அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ. 541.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 4184 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கார்கில் நகர் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 15 தளங்களுடன் ரூ.190 கோடியே 88 லட்சத்தில் 1200 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சினாங்குப்பம் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் ரூ.35 கோடியே 63 லட்சம் செலவில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தூண் மற்றும் 14 தளங்களுடன் ரூ.226 கோடியே 64 லட்சம் செலவில் 1792 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தேனி மாவட்டம், தம்மணம்பட்டி திட்டப்பகுதியில் ரூ.29 கோடியே 52 லட்சம் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 264 குடியிருப்புகள் மற்றும் 36 தரைத்தள குடியிருப்புகள். புதுக்கோட்டை மாவட்டம், பாலன்நகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.23 கோடியே 57 லட்சம் செலவில் 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கறம்பக்குடி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில் 96 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்.

நீலகிரி மாவட்டம், அல்லாஞ்சி திட்டப்பகுதியில் தரை மற்றும் ஒரு தளத்துடன் ரூ.24 கோடியே 58 லட்சம் செலவில் 180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.541 கோடியே 32 லட்சம் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக 4184 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

“நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் ரூ.344 கோடியே 47 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1387 அடுக்குமாடி குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம், அரியலூரில் ரூ.19 கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 72 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சென்னை மாவட்டம், அசோகா காலனியில் ரூ.19 கோடியே 18 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் என மொத்தம் ரூ.382 கோடியே 84 லட்சம் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.382 கோடியில் 1459 அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் ரூ.541 கோடியில் 4,184 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Urban Habitat Development Board ,Chief Minister ,M K Stalin ,CHENNAI ,M. K. Stalin ,Chennai… ,MK Stalin ,Dinakaran ,
× RELATED தமிழர்கள் உயர்ந்த நிலைகளில்...