×

பலாப்பழம் வரத்து அதிகரிப்பு சுட்டெரிக்கும் வெயில் செயற்கை குளிர்பானங்கள் தவிர்த்து 5 லிட்டர் தினமும் தண்ணீர் குடிங்க.!

 

கோவை, ஏப். 21: கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்-க்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுகிறது. இரவு நேரத்திலும் உஷ்ணம் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக பலர் குளிர்ச்சியான செயற்கை குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். ஐஸ் வாட்டர் குடிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில், தற்போது நிலவி வரும் வெயிலின் காரணமாக குளிர்ந்த பானங்களை குடிப்பதால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே குளிர்பானங்களை தவிரித்து குடிநீரை அதிகளவில் குடிக்க வேண்டும் எனவும் கோவை அரசு மருத்துவமனையின் டீன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்ெகாள்ள அவர் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து டீன் நிர்மலா கூறியதாவது:

கோவையில் பொதுவாக எப்போதும் ஒருவிதமான நல்ல காலநிலை இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இது இயல்பைவிட அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வெப்பம் தொடர்பான வானிலை முன்னறிவிப்பு தகவல்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். வெயிலில் செல்வதால் குழந்தைகளுக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சருமம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பாக்டீரியா தொற்று காரணமாக தோலில் அரிப்பு ஏற்படும். இதனை தடுக்க வீட்டில் இருந்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். எனவே, குழந்தைகள், முதியோர் ஆகியோர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மிருதுவான காட்டன் ஆடைகளை பயன்படுத்தலாம். கறுப்பு நிற மற்றும் இறுக்கமான, கனமான ஆடைகளை தவிர்க்கலாம்.

வாகனத்தில் செல்லும் மாணவர்கள் கண் கண்ணாடி, முகத்தை பாதுகாக்க முகக்கவசம், உடலை பாதுகாக்கும் வகையில் கைகளுக்கு ஸ்லீவ் போன்றவற்றை பயன்படுத்தலாம். பகல் நேரத்தில் வெளியில் செல்லும்போது குடைகளை பயன்படுத்த வேண்டும். வெயில் காரணமாக உடலில் நீர்சத்து குறையும். எனவே, நீர்சத்து குறையாமல் இருக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக தினமும் 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், தற்போது உள்ள வெயில் காரணமாக தினமும் 4 முதல் 5 லிட்டர் அளவு தண்ணீரை குடிப்பது நல்லது.

உப்பு, சர்க்கரை (ஓஆர்எஸ்) கரைசலை குடிக்கலாம். மோர், இளநீர், பழச்சாறு போன்ற நீர் ஆகாரங்களையும் குடிக்கலாம். இதனால், உடல் சோர்வு அடையாமல் பார்த்துக்கொள்ள முடியும். செயற்கை குளிர்பானங்களை குடிப்பதால் கேடுதான் ஏற்படும். எனவே, அதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஐஸ் வாட்டர் குடிப்பதும் நல்லது கிடையாது. தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம். ரத்த குழாய் பாதிப்பு உள்ளவர்கள் ஐஸ் வாட்டர் குடித்தால், அவர்களின் குடல் அழுகும் வாய்ப்பு இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பெற்றோர் குழந்தைகள் அதிகளவில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பலாப்பழம் வரத்து அதிகரிப்பு சுட்டெரிக்கும் வெயில் செயற்கை குளிர்பானங்கள் தவிர்த்து 5 லிட்டர் தினமும் தண்ணீர் குடிங்க.! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில்...