சென்னை, ஜூலை 25: மாமல்லபுரம் அருகே நெம்மேலி பேரூரில் ₹4276.44 கோடி மதிப்பில் 85.51 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-04ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, செங்கல்பட்டு மாவட்டம் இசிஆர் சாலை நெம்மேலி, சூளேரிக்காடு என 2 இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்கள் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பேரூர் பகுதியில் இசிஆர் சாலையையொட்டி 85.51 ஏக்கர் பரப்பளவில் ₹4276.44 கோடி மதிப்பில் ஜப்பான் பன்னாட்டு முகமை நிதியுதவியுடன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் 3வது ஆலை ஆசியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக அமைய உள்ளது. இந்த, 3வது ஆலையின் கட்டுமான பணிக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 3வது ஆலையின் கட்டுமான பணியை தொடங்க பேரூரில் பொக்லைன் இயந்திரம் மூலம் அங்குள்ள மணல் மேடுகளை சமன்படுத்தி, கட்டுமானப் பணிக்கு பள்ளம் தோண்டும் பணி நடந்து வந்தது. தற்போது, அங்கு கட்டுமானப் பணி தொடங்கி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளில், தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘3வது ஆலையின் கட்டுமானப் பணியை கடந்தாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது, அங்கு சில மாதங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல்மேடுகள் சமன்படுத்தும் பணிகள் நடந்தது. தற்போது, ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு கட்டுமானப் பணியை தொடங்கி உள்ளோம். இப்பணிகளில், தற்போது குறைந்தளவு ஊழியர்களே ஈடுபடுகின்றனர். விரைவில், ஊழியர்களை அதிகபடுத்தி பணிகளை துரிதப்படுத்த உள்ளோம்’’ என்றனர்.
The post ₹4276.44 கோடியில் 85.51 ஏக்கரில் அமைகிறது பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்: 400 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும் appeared first on Dinakaran.