×

மின்வாரிய, வங்கி அதிகாரிகள் உட்பட 4 பேர் வீட்டை உடைத்து 97 சவரன், ரூ.25 ஆயிரம் கொள்ளை

சென்னை: ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி மற்றும் வங்கி அதிகாரி உட்பட 4 வீட்டில் 97 சவரன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை பழவந்தாங்கல் நேரு காலனி 21வது தெருவை சேர்ந்தவர் பாலவேலாயுத தாஸ் (68). மின்வாரியத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரும், இவரது தம்பி கிருஷ்ணமூர்த்தியும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால், பாலவேலாயுத தாஸின் வீடு முன் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி காட்சியளிக்கிறது.

நேற்று முன்தினம் இரவு பாலவேலாயுத தாஸ், பழவந்தாங்கல் பக்தவத்சலம் நகரில் வசித்து வரும் தனது மகள் பிரியாவை பார்க்க சென்றுள்ளார். நேற்று காலை வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடுபோனதாக பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் நேற்று காலை பாலவேலாயுததாஸ் புகார் செய்தார். பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன், எஸ்ஐ திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

பின்னர், அதே பகுதியில் உள்ள சந்தேகத்துக்குரிய நபர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் ஜெகதீசன் (35) என்பவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஆக்ஸா பிளேடு கொண்டு தாழ்ப்பாளை உடைத்து கொள்ளையடித்தை ஜெகதீசன்  ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்தனர். பின்னர், ஜெகதீசன் கொடுத்த தகவலின்பேரில், அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த 35 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

* அரும்பாக்கம் எஸ்பிஐ ஊழியர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் இருதயராஜ் (57). கேரளாவில் உள்ள சிண்டிகேட் வங்கியின் துணை மண்டல மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவுலின் மற்றும் மகன் ஆல்பர்ட் ஆகியோர் அரும்பாக்கத்தில் வசிக்கின்றனர். கடந்த 10ம் தேதி கணவர் இருதயராஜை பார்க்க பவுலின் மற்றும் மகன் ஆல்பர்ட் ஆகியோர் கேரளா சென்று விட்டனர். நேற்று காலை இருதயராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து, அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதற்கிடையே இருதயராஜ் செல்போன் மூலம் 4 சவரன் நெக்லஸ், 9.75 சவரனில் 7 வலையல்கள், 3 சவரத்தில் தலா 2 செயின், 1.5 சவரன் கம்பல் என 22 சவரன் நகைகள் இருந்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

* சென்னை அடுத்த ஊரப்பாக்கம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (29). இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேமராமேனாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை விஷயமாக அவர் வெளியூர் சென்றுவிட்டார். இதில் வீட்டிலிருந்த அவரது மனைவி மண்ணிவாக்கத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை பார்ப்பதற்காக நேற்று காலை பிரபாகரனின் மனைவி வீட்டிற்கு வந்தார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்ததது. இதேபோல், கூடுவாஞ்சேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசபெருமாள் (45) என்பவர் வீட்டில் 15 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

5 மணி நேரத்தில் சிக்கிய திருடன்

பழவந்தாங்கல் நேரு காலனி 21வது தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பாலவேலாயுத தாஸ் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை, ₹50 ஆயிரம் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டது.  கொள்ளை நடந்த பதற்றத்தில் எவ்வளவு நகை, பணம் கொள்ளைபோனது என தெரியாமல் போலீசில் அதிகமாக பாலவேலாயுத தாஸ்  புகார் தெரிவித்தது தெரிந்தது. கொள்ளையன் ஜெகதீசனை சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள் கண்டு பிடித்த ஆய்வாளர் ரத்தனவேல் பாண்டியன், எஸ்ஐ திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படையினரை பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி பாராட்டினார். இதையடுத்து போலீசார், ஜெகதீசனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு