×

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக சதமடித்த வெயில் தாக்கம் திடீரென தணிந்தது-லேசான தூரல் மழையும் பெய்தது

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று திடீரென குறைந்தது. மேலும் ஒரு சில இடங்களில் லேசான தூரல் மழையும் பெய்தது.தமிழகத்தில் குளிருக்கு விடை கொடுத்து கோடை காலம் தொடங்கினாலும், இரவில் லேசான குளிரும், பகலில் சுட்டெரிக்கும் வெயிலுமாக கடந்த 2 வார காலம் வேலூர் மாவட்டத்தின் சீதோஷண நிலை காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி இந்த ஆண்டில் முதல் முறையாக வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதன்படி 101.1 டிகிரியாக வெயில் வாட்டி வதைத்தது. இதையடுத்து 17ம் தேதி 100.4 டிகிரி, 18ம் தேதி 101.3 டிகிரி, நேற்று முன்தினம் 100.6 டிகிரி என தொடர்ந்து 4 நாட்களாக வெயில் சதமடித்தது. வரும் மே மாதம் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி 28ம் தேதி முடியும் நிலையில், மார்ச் மாதத்திலேயே வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரிப்பதால், அடுத்த 2 மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்த நிலையில் அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பரவலாக லேசான மழை பெய்தது. அதேபோல் வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென தூரல் மழை பெய்தது. மேலும் வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து மதியம் 1 மணியளவில் மீண்டும் வேலூர் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் வெயில் காய்ந்தது.ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்படி நேற்று 93.6 டிகிரி வெயில் பதிவானது. 4 நாட்களாக தொடர்ந்து வெயில் சதமடித்த நிலையில், நேற்று திடீரென சீதோஷண நிலை மாறியதால் பொதுமக்கள் லேசான நிம்மதியடைந்தனர்….

The post வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக சதமடித்த வெயில் தாக்கம் திடீரென தணிந்தது-லேசான தூரல் மழையும் பெய்தது appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,
× RELATED மண்ணெண்ணெய் கேனுடன் காவல் நிலையம்...