×

விற்பனை மையங்களில் சிறப்பு பறக்கும் படை ஆய்வு: விதிமீறலில் ஈடுபடும் உரக்கடைகள் மீது நடவடிக்கை

வல்லம், மே 26: விற்பனை மையங்களில் சிறப்பு பறக்கும் படை ஆய்வு செய்து வருகிறது. வீதிமீறல்களில் ஈடுபடும் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2023ம் ஆண்டு காரீப் பருவத்தில் குறுவை நெல் சாகுபடி நடந்து வருகிறது. குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் விவசாயிகளுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடிக்கு தேவையான உர இருப்பு, விநியோகம் குறித்து வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை அலுவலர்களை கொண்ட சிறப்பு பறக்கும் படையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு, தனியார் உரக்கடைகள் மற்றும் கலவை உர உற்பத்தி நிறுவனம், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை மற்றும் கிடங்குகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் போது, அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்தல், உரக்கடத்தல், உரப்பதுக்கல் மற்றும் மானியத்தில் விநியோகிக்கப்படும் யூரியாவை விவசாயம் அல்லாத பிற தொழில் நிறுவனங்கள் (தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள்களாக) பயன்படுத்துவது, யூரியா உரத்துடன் இதர உரங்களையும் வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது போன்ற செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டது.

உர விற்பனை நிலையங்களில் கையடக்க விற்பனை கருவியின் இருப்பு மற்றும் உண்மை இருப்பு, உரஉரிமம், விற்பனை உரிமத்துடன் உரிய அனுமதி பெற்ற நிறுவனங்களின் உர இணைப்புகள், உர சேமிப்பிற்கான கிடங்கு இணைப்பு, உரத்தின் பெயர், விற்பனை விலை இருப்பு விவரம் அடங்கிய உர விலைப்பட்டியல் பலகை வைக்கப்படுவது ஆகிய செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது கண்டறியபட்ட குறைபாடுகள் மற்றும் தவறுதல்களுக்கு உரக்கடைகளின் மேல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மானிய விலையில் விற்கப்படும் யூரியா உள்ளிட்ட உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் யூரியா உரத்துடன் இதர உரங்களை வாங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்துதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் உரக்கடைகள் மீது உரக்கட்டுபாட்டு ஆணை-1985 மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955 ன் படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் அவர்களது உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2023-24ம் ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பொருட்டு உர இருப்பு மற்றும் படை தவிரவும், வட்டாரத்திலுள்ள அனைத்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கையாக கண்காணிக்கப்பட்டு வருவதால் உரம் தொடர்பான புகார்களை 04362-267679 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post விற்பனை மையங்களில் சிறப்பு பறக்கும் படை ஆய்வு: விதிமீறலில் ஈடுபடும் உரக்கடைகள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vallam ,Special Flying Squad ,Special Flying Force ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம்