×

விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரம் சதுர்த்தி விழாவை முன்னிட்டு  2 முதல் 15 அடி உயர சிலை வடிவமைப்பு  கண்கவர் வண்ணங்களில் விதவிதமாக தயார்

திருச்சி, ஆக.26: இந்தாண்டு செப்.7ம் தேதி வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விநாயகர் அவதரித்த தினமான வளர்பிறை சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். விநாயகர் என்ற வார்த்தையில் வரும் ‘வி’ என்ற எழுத்துக்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற அர்த்தமும், நாயகர் என்றால் தலைவன் என்ற அர்த்தமும் கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் விநாயகர் என்ற சொல்லுக்கு இதற்கு மேல் ஒருவன் இல்லை என்பதே இதன் பொருளாகும். இந்து மதத்தை சேர்ந்தவர்கள் விநாயகரை முழு முதற்கடவுளாக கொண்டு வழிபடுவதற்கு இதுவே காரணம். ஒரு காலத்தில் வடநாட்டு பகுதிகளில் மட்டும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை, காலப்போக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும் பிரசித்தி பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவொரு ஆண்டும் பல லட்சம் விநாயகர் சிலைகள், விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்றாள் நாள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை மூன்றாம் நாள் நீர்நிலைகளில் கரைப்பதற்கு காரணங்கள் பல உண்டு என்றாலும், அதில் முக்கியமான ஒரு காரணம் நம்மை யோசிக்க செய்வதாகவே உள்ளது. ஆடி மாதத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரை புரண்டோடும் வெள்ள நீரின் வேகத்தில் நீர்நிலைகளில் காணப்படும் மண் அரித்துக்கொண்டு சென்றுவிடுகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் தேங்காமல், வேகமாக கடலை நோக்கி பாய்ந்தோடி விடும். நீர் நிலைகளில் தண்ணீர் தேங்காமல் போவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்படும். எனவே விநாயகர் சதுர்த்தியன்று களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகளை, மூன்று நாள் வைத்திருந்து, அது காய்ந்த பின்னர் நீர் நிலைகளில் கொண்டு சென்று கரைக்கும் போது, நீர்நிலைகளில் அடிப்புறம் களிமண் சேர்கிறது. களிமண்ணுக்கு தண்ணீரை நிலை நிறுத்தும் தன்மை இருப்பதால் தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.

இதுவே விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான காரணமாகும். ஆனால் காலப்போக்கில் ரசாயண கலர் பூச்சுக்களை கொண்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டதால் நீர்நிலைகள் மாசடையும் சூழல் உருவானது. இதனால் தற்போது விநாயகர் சிலைகள் தயாரிப்புக்கு ரசாயண வண்ணங்கள் பூசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் சிற்பக் கலைகள் அறிந்தவர்களும் தற்போது ஈடுபட்டு வந்தாலும், பன்னெடுங்காலமாக விநாயகர் சிலைகளை செய்யும் பணியை, மண்பாண்டங்கள் தயார் செய்யும் தொழிலாளர்களே ெசய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல், கொண்டையம் பேட்டை பகுதியில் இந்த விநாயகர் சிலை செய்யும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இதை வெறும் தொழிலாக நினைத்து மட்டும் செய்யாமல், ஒரு இறைத்தொண்டாகவும் நினைத்து, பக்தி கமலும் மனதுடன் இத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு விற்பனையாகும் சிலைகளின் எண்ணிக்ைக அதிகரித்து வரும் நிலையில், இந்தாண்டும் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இப்பகுதி மக்கள் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான சிலைகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வழக்கத்துக்கும் மேல் இந்தாண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இங்கு 2 அடி உயரத்தில் இருந்து 15 அடி உயரம் வரையிலான சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ₹1,000 முதல் ₹1 லட்சத்திற்கும் மேல் வரையிலான விலையில் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சிலைகள் யாவும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், ரசாயண கலப்பின்றி, சிலை செய்வதில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றி உருவாக்கப்படுகின்றன என்பது தனிச்சிறப்பு. விநாயகர் சதுர்த்தி களை கட்டத்துவங்கி விட்டதை இது காட்டுவதாக உள்ளது.

The post விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரம் சதுர்த்தி விழாவை முன்னிட்டு  2 முதல் 15 அடி உயர சிலை வடிவமைப்பு  கண்கவர் வண்ணங்களில் விதவிதமாக தயார் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Chaturthi Festival ,Trichy ,Ganesha Chaturthi ,Varapira Chaturthi ,Hinduism ,India ,
× RELATED விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு...