×

வன உயிரினங்களுக்கு சாலையோரம்உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

தர்மபுரி, ஏப்.13: தர்மபுரி மாவட்டத்தில் சாலையோரங்களில் வன உயிரினங்களுக்கு உணவு வழங்கக்கூடாது. மீறினால் வனச்சட்டம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை அலுவலர் அப்பாலநாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர் கணவாய், மஞ்சவாடி கணவாய், மூக்கனூர் மலை, கோட்டப்பட்டி வனப்பகுதியில் குரங்கு, மான், முயல், யானை, செந்நாய், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீர்நிலைகளை தேடி வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில், நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வெயில் வாட்டி வதைத்து வருவதால், வனத்தில் இயற்கையாக அமைந்துள்ள குளங்கள், கசிவுநீர் குட்டைகள் வற்றி வருகின்றன. அனல் கக்கும் வெயிலின் கொடுமையால் விலங்குகள் உணவாக எடுத்து கொள்ளும் காட்டு மா, அத்திமரம், விளாமரத்தில் இலைகள் காய்ந்து சருகுகளாகி விட்டது. இதனால், வன விலங்குகளின் உணவு, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தொப்பூர் காட்டில் உணவு கிடைக்காமல் வெளியே வரும் குரங்குகள், தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி, பஸ், கார்களை வழிமறித்து பிச்சை எடுப்பது போல கையேந்துகின்றன. பயணிகள் சிலர் கையில் இருக்கும் உணவுப் பண்டங்களை, தூக்கி வீசிச்செல்கின்றனர். ஒருசிலர் வாகனத்தை நிறுத்தி கொடுக்கின்றனர். தொப்பூர் கணவாயின் நெடுஞ்சாலையோரத்தில் தண்ணீர் தொட்டி உள்ளது. கோடையில் வறட்சி நிலவும் நேரத்தில், இந்த தண்ணீர் தொட்டியில் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். சாலையோரத்தில் சுற்றும் குரங்குகள், வனத்தில் உள்ள மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள், இதில் தண்ணீர் குடித்து விட்டு செல்லும். தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும், கணவாய் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் குரங்குகள் தவித்து வருகின்றன.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வனத்துறை அலுவலர் அப்பாலநாயுடு கூறியதாவது: தொப்பூர் கணவாய் பகுதியில், சாலையில் இருந்து அரைகிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காப்புக்காட்டில் தடுப்பணை, கசிவுநீர் குட்டைகளில் தண்ணீர் உள்ளது. குரங்கு போன்ற வனவிலங்களுக்கு தேவையான நேரத்தில் தண்ணீர் குடித்து செல்லும் வசதி உள்ளது. நீண்ட தூரம் செல்லும் பயணிகள், கணவாய் பகுதியில் இளைப்பாறும் போது, தாங்கள் சாப்பிடும் உணவுகளை குரங்குகளுக்கு போடுகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் தரும் உணவுகளை சாப்பிட்டு பழகிய குரங்குகள், தற்போது சாலையோரத்தில் கையேந்தி நிற்கும் நிலைக்கு வந்துள்ளன. தொப்பூர் வனத்தில் போதுமான உணவு, தண்ணீர் வசதி உள்ளது. வனச்சட்டத்தின்படி சாலையோரம், கிராமங்கள் அருகில் வனவிலங்குகளுக்கு தொட்டி அமைத்து தண்ணீர் வழங்கக்கூடாது.

சாலையோர தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி வழங்குவது இயற்கைக்கு மாறானது. குரங்குகள் இயற்கையில் கிடைக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டு, வனத்தில் உள்ள குட்டை, குளம், தடுப்பணைகளில் தண்ணீர் குடித்து வாழவேண்டும்.
தொப்பூர் கணவாய் சாலையோரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை, எல் அன்டு டி சுங்கச்சாவடி சார்பில் வைத்துள்ளனர். வனத்துறை சார்பில் வைக்கப்படவில்லை. இவ்வாறு சாலையோரம் குடிநீர் வழங்குவது, வனவிலங்குகளுக்கு மேலாண்மை நடைமுறை அல்ல. இது மனித, விலங்கு மோதல்கள் மற்றும் சாலை விபத்துக்கு வழிவகுக்கும். வனவிலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என நெடுஞ்சாலை ஓரங்களில் விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்படும். மேலும், பொதுமக்கள் கணவாய் பகுதியில் வாகனங்களை நிறுத்தவோ, வன உயிரினங்களுக்கு உணவு வழங்கவோ கூடாது. மீறினால் வனச்சட்டம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வன உயிரினங்களுக்கு சாலையோரம்
உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு